வினாடி வினா
அரஃபா என்றால் என்ன மற்றும் இந்த தினத்தின் மாண்புகள் என்ன?
விடை:
அரஃபா என்றால் என்ன? 👇🏼
சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் முதன் முதலாக சந்தித்த இடம் அரஃபா ஆகும். இதனால்தான் இந்த இடத்திற்கு அரஃபா என்று பெயர் சொல்லப்படுகிறது, வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமான கூறப்படுகின்றது.
அரஃபா தினம் என்றால் என்ன? 👇🏼
அரஃபா தினம் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல்ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும் இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அரஃபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அரஃபா எனும் இடத்தில் ஒன்று கூறுகின்றார்கள். அரஃபா மைதானத்தைப் பொருத்தவரை எப்போதும் வெறுமனே வெட்ட வெளியாகக் காட்சி தரும். ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் ஒன்று கூடும் போது அந்த அரஃபா மைதானம் முக்கியத்துவம் பெறுகிறது.
அரஃபா தினத்தின் மாண்புகள் என்ன? 👇🏼
அரஃபா தினம் என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான்.
ஆதாரம்:
‘இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்.’ (திருக்குர்ஆன் 5:3)
இந்த வசனம் ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரஃபா தினத்தின் போதும தான் இறங்கியது.
இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கூறும் போது, ‘நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்கள். அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரபா (துல்ஹஜ் 9–ம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீது ஆணை! நாங்கள் அப்போது அரபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் தாரிக்பின் ஷிஹாப் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 4606
#அரபாதினத்தைவிடசிறந்தநாள்வேறெதுவும்_கிடையாது. மற்ற தினங்களைவிட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா
நூல்: முஸ்லிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக