புதன், 30 செப்டம்பர், 2020

ஒரு நாயின் உதாரணம்

வினாடி வினா

அல்லாஹ் "நாயை" யாருக்கு உதாரணம் காட்டுகிறான்?

1. ஃபிர்அவ்ன்

2. யூதர்கள்

3. அல்லாஹ்வின் வசனங்களை பொய்யாக்கும் மக்கள்

4. மேற்குறிப்பிட்ட அனைத்தும்


விடை: 3. அல்லாஹ்வின் வசனங்களை பொய்யாக்கும் மக்கள்


ஆதாரம்:

நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள். (7:176)

 

இந்த உலகத்தில் 5 விஷயங்களில் நஷ்டத்தைக் கொண்டு சோதிக்கப்படுவோம்

வினாடி வினா

இந்த உலகத்தில் எந்த 5 விஷயங்களில் நஷ்டத்தைக் கொண்டு நாம் சோதிக்கப்படுவோம் என அல்லாஹ் கூறியுள்ளான்?


விடை: பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள்


ஆதாரம்: 

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (2:155)


அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன்

வினாடி வினா

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் யார்?


விடை: எப்போது பார்த்தாலும் கடுமையாக சச்சரவு செய்து கொண்டிருப்பவனும் சண்டைபிடிப்பவனும் ஆவான்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.  

என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2457. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


மறைமுகமாக செய்யும் தர்மத்துக்கு மட்டுமா நன்மை கிடைக்கும்?

வினாடி வினா

மறைமுகமாக தர்மம் செய்தால் மட்டுமே அது நமக்கு நன்மை பயக்கும். 

1. சரி

2. தவறு


விடை: தவறு


ஆதாரம்: 

(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும்.) ஆயினும், அதை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்). மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். (2:271)

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருள்களை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு.  தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)  


நிராகரிக்கும் பெண்களுக்கு உதாரணம்

வினாடி வினா 

நிராகரிக்கும் பெண்களுக்கு அல்லாஹ் யாரை உதாரணம் கூறுகிறான்? 

1. இஸ்மாயில் நபியின் மனைவி & நூஹ் நபியின் மனைவி

2. அபு லஹபின் மனைவி & லூத் நபியின் மனைவி

3. லூத் நபியின் மனைவி & நூஹ் நபியின் மனைவி

4. அபு லஹபின் மனைவி & இஸ்மாயில் நபியின் மனைவி


விடை: 3. லூத் நபியின் மனைவி & நூஹ் நபியின் மனைவி


ஆதாரம்: 

நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்கள் இருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) ‘‘நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுந்து விடுங்கள்'' என்றே கூறப்பட்டது. (66:10)


சொர்க்கத்தில் இல்லாத 4 விஷயங்கள்

வினாடி வினா

சொர்க்கத்தில் எந்த 4 விஷயங்கள் இருக்காது என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான்?


விடை: பசி, நிர்வாணம், தாகம் மற்றும் வெயில்


ஆதாரம்:

‘‘நிச்சயமாக நீர் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்." (20:118)

“நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்). (20:119)


"ஒரு வழுக்கைப் பாறையின்” உதாரணம்

வினாடி வினா

அல்லாஹ் எதற்கு “ஒரு வழுக்கைப் பாறையின்” உதாரணத்தை கூறியுள்ளான்?


விடை: 

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கிறது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து ஒரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும், அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்தை (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான். (2:264)