ஞாயிறு, 29 நவம்பர், 2020

யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறார்கள், அவர்கள் அவர்களுக்குள் ஷைத்தானுடைய தவறான எண்ணம் ஊசலாடினால் என்ன செய்வார்கள்?

வினாடி வினா

யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறார்கள், அவர்கள் அவர்களுக்குள் ஷைத்தானுடைய தவறான எண்ணம் ஊசலாடினால் என்ன செய்வார்கள்?



விடை: அவர்கள் அல்லாஹ்வை நினைப்பார்கள். அதன் மூலம் விழிப்படைவார்கள்.


ஆதாரம்:

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (7:201)



சனி, 28 நவம்பர், 2020

யாருடைய உள்ளத்தில் அணுவளவு __________ இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.

வினாடி வினா

யாருடைய உள்ளத்தில் அணுவளவு __________ இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.


1. கோபம்

2. தற்பெருமை

3. கஞ்சத்தனம்



விடை: 2. தற்பெருமை


ஆதாரம்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 147., அத்தியாயம்: 1. இறைநம்பிக்கை)



வெள்ளி, 27 நவம்பர், 2020

ரஹ்மானுடைய அடியார்கள் தானம் கொடுக்கும்பொழுது எதை பேணுவார்கள்?

வினாடி வினா

ரஹ்மானுடைய அடியார்கள் தானம் கொடுக்கும்பொழுது எதை பேணுவார்கள்?



விடை: நடுநிலையை பேணுவர்


ஆதாரம்:

அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள். (25:67)



வியாழன், 26 நவம்பர், 2020

நபி(ஸல்) தன் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று கருதியிராவிட்டால், எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாக என்ன செய்ய கட்டளையிட்டிருப்பார்கள் என கூறினார்கள்?

வினாடி வினா

நபி(ஸல்) தன் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று கருதியிராவிட்டால், எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாக என்ன செய்ய கட்டளையிட்டிருப்பார்கள் என கூறினார்கள்? 



விடை: பல் துலக்க


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல்துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 7240. , அத்தியாயம்: 7. தயம்மும்)



புதன், 25 நவம்பர், 2020

குர்ஆன் ஓதுவதன் நன்மைகள்

வினாடி வினா

குர்ஆன் ஓதுவதன் நன்மைகள் என்ன?



விடை: குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.


ஆதாரம்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1470., அத்தியாயம்: 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குர்ஆனை மிகுந்த சிரமத்துடன் ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு" என இடம்பெற்றுள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1462., அத்தியாயம்: 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்)


நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிப் ஒர் எழுத்தாகும், லாம் ஓர் எழுத்தாகும், மீம் ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்). 

(திர்மிதி: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி))



செவ்வாய், 24 நவம்பர், 2020

தமக்கு ஒரு மகிழ்ச்சி அல்லது ஒரு துயரம் ஏற்படும் பொழுது, ஒரு இறை நம்பிக்கையாளரின் செயல்பாடு எப்படி அமையும்?

வினாடி வினா

தமக்கு ஒரு மகிழ்ச்சி அல்லது ஒரு துயரம் ஏற்படும் பொழுது, ஒரு இறை நம்பிக்கையாளரின் செயல்பாடு எப்படி அமையும்? 



விடை: ஒரு இறை நம்பிக்கையாளருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், நன்றி செலுத்துவார். துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காப்பார்.


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5726., அத்தியாயம்: 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்)




திங்கள், 23 நவம்பர், 2020

ஈது தொழுகைகளின் போது மாதவிடாய் வந்த பெண்களுக்குரிய சட்டம்

வினாடி வினா

வயதுக்கு வந்த பெண்கள், திருமணமானவர்கள், மாதவிடாய் வந்த பெண்கள் அனைவரும் ஈது தொழுகைக்குரிய இடங்களுக்கு வர வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. இதில் மாதவிடாய் வந்த பெண்களுக்கு உள்ள சட்டம் என்ன?



விடை: மாதவிடாய் வந்த பெண்கள் தொழுகையை தவிர்த்து மற்ற பிரார்த்தனைகளில் பங்கு பெற்றுக் கொள்ள வேண்டும். மாதவிடாய் வந்த பெண்கள் தொழுகின்ற இடத்தை விட்டு விலகி இருப்பார்கள்; மக்களுடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள்.


ஆதாரம்:


நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார். 

'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?' என நான் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார். 

உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?' என நான் கேட்டதற்கு 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்' எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்' என்பதையும் சேர்த்தே கூறுவார். 

'கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, 'மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?' என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்' என ஹஃப்ஸா அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 324. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


ஞாயிறு, 22 நவம்பர், 2020

பெண்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது என்ன செய்யக் கூடாது?

வினாடி வினா

பெண்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது என்ன செய்யக் கூடாது? 



விடை: நறுமணம் பூசிச் செல்லக் கூடாது


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.

இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 758., அத்தியாயம்: 4. தொழுகை)


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது;

நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 759., அத்தியாயம்: 4. தொழுகை)



சனி, 21 நவம்பர், 2020

ஜமாஅத் தொழுகை முடிந்து யார் முதலில் எழுந்து செல்வது, ஆண்களா அல்லது பெண்களா?

வினாடி வினா

ஜமாஅத் தொழுகை முடிந்த பின்பு பெண்கள் முதலாவதாக வெளியேறிச் செல்ல ஆண்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் இருந்தது.


1. சரி

2. தவறு



விடை: 1. சரி


ஆதாரம்:

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.

பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

(ஸஹீஹுல் புகாரி: 837. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


உம்முஸலமா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்னால் பெண்கள் திரும்பிச் செல்வதற்காகவே இப்படி நபி(ஸல்) செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன் என ஸுஹ்ரி கூறுகிறார்.

(ஸஹீஹுல் புகாரி: 870. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)



வெள்ளி, 20 நவம்பர், 2020

ஜமாத் தொழுகைகளில், பெண்களுக்கு சிறந்த வரிசை

வினாடி வினா

பள்ளியில் ஜமாத்தாக தொழுகின்றபோது, எந்த வரிசை பெண்களுக்கு சிறந்ததாகும்? 



விடை: கடைசி வரிசை


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 749., அத்தியாயம்: 4. தொழுகை)



வியாழன், 19 நவம்பர், 2020

மஸ்ஜிதுக்குச் செல்வதை விட்டு பெண்களை தடுக்கலாமா?

வினாடி வினா

மஸ்ஜிதுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதியும்; ஆண்கள் அவர்களை தடுக்கக் கூடாது என்ற தடையும் இருக்கிறது. 


1. சரி

2. தவறு



விடை: 1. சரி


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம். இதை சாலிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 751., அத்தியாயம்: 4. தொழுகை)


இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 900. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


புதன், 18 நவம்பர், 2020

கொட்டாவியின் போது என்ன செய்ய வேண்டும்?

வினாடி வினா


மார்க்கத்தின் அடிப்படையில் கொட்டாவியின் போது என்ன செய்ய வேண்டும்?



விடை: கொட்டாவியை முடியுமானவரை தடுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தடுக்க முடியாத பட்சத்தில், நம் கையை வாயில் வைத்து மறைத்துக்கொண்டு “ஹா” என்று சம்பதமிடாமல் கொட்டாவி விடவேண்டும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 3289. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)



“அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜிம்” கூறுவதற்கான விளக்கத்தை கீழ்க்காணும் லிங்க்’கை கிளிக் செய்து படிக்கவும். 


https://www.islamkalvi.com/?p=118940


செவ்வாய், 17 நவம்பர், 2020

முஸ்லிமா? முஹாஜிரா?

வினாடி வினா


யார் முஸ்லிமாவார்? யார் முஹாஜிராவார்?



விடை:


ஆதாரம்:

'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 10. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


திங்கள், 16 நவம்பர், 2020

தொழுகையை விட்டவன்

வினாடி வினா

தொழுகையை விட்டவன் யாருக்கு சமமாவான்? 



விடை: காஃபிருக்கு சமமாவான்


ஆதாரம்:


(அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைப்பு, இறைமறுப்பு இவற்றிக்கிடையில் (உள்ள வித்தியாசமாக) தொழுகைவிடுவது உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : திர்மிதீ (2543)


நமக்கும் அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். யார் அதை விட்டுவிடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : திர்மிதீ (2545)


ஞாயிறு, 15 நவம்பர், 2020

உண்மை மற்றும் பொய் சொல்வதன் இறுதி நிலை

வினாடி வினா

உண்மை மற்றும் பொய் சொல்வதன் இறுதி நிலை என்ன? 



விடை: உண்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும்; பொய் நரகத்திற்கு வழிவகுக்கும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆம்விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். 

என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 6094. , அத்தியாயம்: 78. நற்பண்புகள்)


சனி, 14 நவம்பர், 2020

அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்பவர்கள்

வினாடி வினா

யார் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றனர்?


விடை: ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை குற்றமற்றவர் மீது சுமத்துவோர்.


ஆதாரம்:

எவரேனும், ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான். (4:112)



வெள்ளி, 13 நவம்பர், 2020

அல்லாஹ் ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் அனுப்பியுள்ளானா?

வினாடி வினா

உலகம் ஆரம்பித்த முதல், அல்லாஹ் ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் அனுப்பியுள்ளான்.


1. சரி

2. தவறு


விடை: 1. சரி


ஆதாரம்:

ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை. (10:47)


வியாழன், 12 நவம்பர், 2020

அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடடுக்கப்பட்டவர்கள்

வினாடி வினா

அல்லாஹ் யார் யாரை அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான்?



விடை: ஆதமையும், நூஹையும், இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும்.


ஆதாரம்:

நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் (அவ்வாறே) இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான். (3:33)


புதன், 11 நவம்பர், 2020

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்கள் எத்தனை?

வினாடி வினா

மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷை எத்தனை மலக்குகள் சுமப்பர்? 


1. 5

2. 6

3. 7

4. 8


விடை: 4. 8


ஆதாரம்:

(நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள். (69:17)


செவ்வாய், 10 நவம்பர், 2020

உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா?

வினாடி வினா

அல்லாஹ் எந்த பாவக் காரியத்தை, ஒருவன் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவதோடு ஒப்பிட்டுள்ளான்? 


1. பொய் சொல்வதை

2. புறம் பேசுவதை

3. அனாதையின் பொருளை ஏமாற்றுவதை


விடை: 2. புறம் பேசுவதை


ஆதாரம்:

நம்பிக்கையாளர்களே! அதிகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேசவேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து விலகுபவர்களை) அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான். (49:12)



திங்கள், 9 நவம்பர், 2020

எத்தனை நாள்களுக்கு மேல் எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று?

வினாடி வினா

எத்தனை நாள்களுக்கு மேல் எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று? 


1. 1

2. 3

3. 5

4. 7


விடை: 2. 3


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. 

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 6065. , அத்தியாயம்: 78. நற்பண்புகள்)



ஞாயிறு, 8 நவம்பர், 2020

எந்த மூன்று தன்மைகள் அமையப்பெறாத எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார்?

வினாடி வினா


எந்த மூன்று தன்மைகள் அமையப்பெறாத எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார்?


விடை:


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:) 

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராக வது.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.55 

(ஸஹீஹுல் புகாரி: 6041. , அத்தியாயம்: 78. நற்பண்புகள்)



சனி, 7 நவம்பர், 2020

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகிறவரா?

வினாடி வினா

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகிறவர் ஆவார். 


1. சரி

2. தவறு


விடை: 2. தவறு


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19 

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 

இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 5991. , அத்தியாயம்: 78. நற்பண்புகள்)


வெள்ளி, 6 நவம்பர், 2020

நபி(ஸல்) யாருடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டார்கள்?

வினாடி வினா

நபி(ஸல்) யாருடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டதாக கூறினார்கள்? 


1. அலி(ரலி).

2. உமர்(ரலி)

3. பிலால்(ரலி)



விடை: 3. பிலால்(ரலி)


ஆதாரம்:


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பின் நிர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்' என்று விடையளித்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 1149. , அத்தியாயம்: 19. தஹஜ்ஜுத்)


வியாழன், 5 நவம்பர், 2020

அல்லாஹ் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருப்பதற்கான காரணம்

வினாடி வினா

அல்லாஹ் ஏன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான்?



விடை: உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே.


ஆதாரம்:


உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான். (67:2)


புதன், 4 நவம்பர், 2020

ஒவ்வோர் ஆத்மாவும் சுவைத்தே தீரவேண்டிய ஒன்று

வினாடி வினா

ஒவ்வோர் ஆத்மாவும் _________ சுவைத்தே தீரவேண்டும்.


1. துக்கத்தை

2. இன்பத்தை

3. வாழ்வை

4. மரணத்தை



விடை: 4. மரணத்தை


ஆதாரம்:


ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (3:185)